About Me [Tamil]

எனது கிராமம் புங்குடுதீவு.எனது ஆரம்பக்கல்வியை சொந்த கிராமத்திலும் இடைநிலைக்கல்வியினை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும் பயின்றேன். உயர்தரத்தில் கணிதப்பிரிவை தெரிவு செய்து ஒரு பொறியிலாளனாக வேண்டும் என்ற கனவுடன் தொடர்ந்தேன். பெற்றோர் எனது கல்வித்துறை தெரிவு தொடர்பில் எனக்கு பூரண சுதந்திரத்தினை தந்திருந்தனர். எனது வீட்டு சுழலும் இடைநிலைக்கல்வியில் யாழ் இந்துக்கல்லூரியில் ச.வே.பஞ்சாட்சரம் அவர்களது தமிழ் பாசறையில் குளித்து எழுந்தமையாலும் அமரர் கலாநிதி சொக்கன் ஐயாவின் வகுப்பில் சொக்கும் தமிழில் கலக்கும் சந்தர்ப்பத்தினாலும் தமிழ் மீதான எனது காதல் தொடர்ந்தவண்ணம் உள்ளது.

தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் கசப்பானதாயினும் எனக்கு பல்வேறு அனுபவங்களை ஈட்டித்தந்ததோடு தாய் மொழி மீதான காதலை மேலும் வலுப்படுத்தியதோடு புத்தாக்க ஆர்வங்களையும் தந்தது. இதன் போது நூலகங்களும் நங்கூரம் போன்ற சஞ்சிகைகளும் வானொலிகளும் பெரிதும் உதவின.

கணினித்துறைக்கான பிரவேசம்

எமது கல்லூரியில் பெரும்பாலும் அனைவரும் விஞ்ஞான கணிதத்துறைக்கு விரும்பிச்சென்றாலும் மொழிப்பற்றாளர்களாக வளர்க்கப்படுவது வளமை! நான் எனது கனவினை தவறவிட்டபோது அறிவியல் நோக்கி என் கவனம் திரும்பியது. அப்போது கணினி எமக்கு காட்சிபொருளாகவே காட்டப்பட்டது. அந்த விசனம் என்னைப்போன்றவர்களை கணினித்துறைக்குள் விரட்டிச்சென்றதில் வியப்பில்லை.

கணித்துறையில் நுழையும் பொது 1998 இலும் இப்போது போலவே மைக்ரோசொபட் ஒபீஸ்; பிரபல்யமாகி இருந்தது. எனக்கு என்னவோ நான் உருவாக்குனராக இருக்கவேண்டும் பிரயோக மென்பொருள் உபயோகிப்பாளனாக மாறக்கூடாது என்பதில்குறியாக இருந்தேன். அதனால் தான் பஸ்கால் கணினிமொழியை பயில்வதற்காக TRRO கணினி பயிற்சி மையத்தில் இணைந்தேன். இங்கு எனக்கு ஆசானாக சசி கிடைத்தார். அவர் தான் கணினியில் முதல்குரு! அவர் தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் நிதிக்கிளையில் கணினி பிரயோக உதவியாளராக பணியாற்றுகின்றார். அதன்பின் விசுவல்பேசிக் அதன்பின் யாவா எனது பயணம் கணினி மொழிகளில் தொடர்ந்தது.

இதனிடையே பல தமிழ்க் குடும்பங்களின் கனவான வெளிநாட்டு கல்வி ஆசை எனது குடும்த்திலும் முளைத்ததில் வியப்பில்லை. வெளிநாட்டு பல்கலைக்கழக கட்டடங்களின் அழகு வசதிகள் குறித்த செய்திகளால் என்னுள்ளும் வெளிநாட்டுக்கல்வி பெற்று மீளவேண்டும் என்ற அவா தூபமிடப்பட்டது.இருந்தாலும் எனது உள்நாட்டு கல்வி நடவடிக்ககைளை தளர்த்தவில்லை. ஒருபக்கம் வெளிநாட்டு முயற்சி அதேவேளை தலைநகரில் எனது கணினிக்கல்வி தொடர்ந்தது.அதன்போது எனது கவனம் இணையத்துறைக்கு மாறியது. அத்தோடு தொழிற்துறைக்கும் தாவியது. ஒருவாறு வெளிநாட்டு முயற்சி தோல்வியில் முடிவடைந்த போது உள்நாட்டிலேயே கல்வி முயற்சியை கொண்டுசெல்வதென முடிவுசெய்யப்பட்டது.

தற்போதைய நிலை

2003 முதல் சொந்தமாக இணையத்துறை மென்பொருள் நிறுவனத்தினை நடாத்திவருகின்றேன். அதே வேளையில் 2010 முதல் யாழ் பல்கலைக்கழக்த்தில் ஒப்பந்த அடிப்படையில் இணையவழி வியாபார முகாமைத்துவமானி கற்கைநெறியின் இணையக்கட்டுபாட்டாளராகவும் தொழிற்பட்டு 2021 செப்டெம்பரில் பணியில் இருந்து விலகியிருக்கின்றேன் .வடக்கு தகவல் தொழில்நுட்ப சம்மேளனத்தை நிறுவியவர்களின் ஒருவராக இருந்து தற்போது அதன் தலைவராக இருக்கின்றேன்.

தமிழ் கணினியியலில் எனது பயணம்!

தமிழ் மற்றும் கணினி அறிவியல் மீதான அதீத காதலால் தமிழ் கணினி இயலில் எனது கவனத்தினை செலுத்திவருகின்றேன். அறிவிலுக்கு குறிப்பாக கணினிக்கல்விக்கு தமிழ் ஒருதடையல்ல என நிறுவ போராடும் அறிவியில் போராளிகளில் ஒருவனாக இருக்க விரும்புகின்றேன்.கடந்தகாலங்களில் கருத்தரங்குககள் தமிழ்மொழி மூலமான ஏனைய செயற்பாடுகளின் ஊடாக  இதனை செய்துவந்திருக்கின்றேன். கணினி சஞ்சிகைகள் பலவற்றில் பங்காற்றிவந்திருக்கின்றேன்

உலகத்தமிழ் இணைய மாநாடுகளில் பங்கேற்று தமிழ் கணினித்துறை சம்பந்தமாக ஆய்வுகட்டுரைகளை சமர்ப்பித்திருக்கின்றேன். தமிழ் இணையத்தளங்கள் தமிழ் மென்பொருள்கள் மற்றும் கலைச்சொல்லாக்கம் போன்ற துறைகளில் பங்கெடுத்துவருகின்றேன். உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம், ,நுட்பம் இலங்கை போன்ற அமைப்புக்களில் இணைந்து என்னாலியன்ற பணிகளை செய்து வருகின்றேன்.